Monday, December 3, 2012

உங்களால் கணக்கிடமுடியாதவையே மதிப்பானவை - ஆனந்தம்



   
      நான் ஒரு உயர்ந்த வணிகக் கல்வி நிறுவனத்தை பார்வையிடச் சென்ற பொழுது, அங்கு அவர்கள், “உங்களால் கணக்கிட முடியாதவை மதிப்பற்றவை” என்று கற்பிப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இல்லை, உங்களால் எதை கணக்கிட முடியாதோ அதுவே மதிப்பானது. உங்கள் வாழ்க்கையில் எதை உங்களால் கணக்கிட முடியுமோ அதன் முக்கியத்துவம் குறைவுதான். உங்களால் கணக்கிட முடிந்தது என்பது உங்கள் வருமானம்தான். வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தலாம். ஆனால் ஒரு வாழ்க்கையை உருவாக்க முடியாது. பிழைப்பு நடத்தியே உங்கள் வாழ்க்கையை கழிக்க வேண்டுமா அல்லது ஓர் நல்ல வாழ்க்கையை உருவாக்க வேண்டுமா? ஒவ்வொரு மனிதனும் தேர்ந்தெடுக்க வேண்டியது இதைத்தான்.
      துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைமுறை செயற்கைத்தனமாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதால் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிழைப்புக்காகவே செலவிடுகிறார்கள். வீடு வாங்குகிறார்கள், 30 வருடம் வீட்டிற்கு அடைமானமாகி விடுகிறார்கள். வீடு அடமானமாகாது, அவர்கள் தான் அடமானமாகி விடுகிறார்கள். பின்னர் கார் வாங்குகிறார்கள், அதற்கு 10 வருடம் அடமானம். அவர்கள் கல்விக்கான கடன் தொகையை அடைப்பதற்கே 15 வருடங்கள் ஆகிவிடுகின்றன. இன்றைக்குத்தான் ஒரு செய்திதாளில் படித்தேன். வரும்காலத்தில், பூமியில் இனி பிறக்கும் மனிதர்களில் மூன்றில் ஒருவர் 100 வருடம் வரை வாழ்வார்களாம். கல்வியை 32 வயதில் முடித்து அதற்கான கடன் தொகையை 50 வயதில் அடைத்து, 45 வயதில் திருமணம் செய்து 70, 72 வயதில் ஒய்வுபெற்று விடுவார்கள். அதன் பிறகு உள்ள 30 வருடங்களுக்கு இருக்கவே இருக்கிறது மருத்துவ காப்பீட்டுத் திட்டம். மருத்துவர் பின் மருத்துவராக தேடிச் செல்ல வேண்டியதுதான்.
      நீங்கள் ஒரு நல்ல வாழ்க்கையை உருவாக்கத் தேர்ந்தெடுத்தால், இந்த சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்கிற ரீதியில் யோசிக்காதீர்கள். உங்களுக்கென்று ஏதாவது அற்புதமான செயலை செய்தீர்களேயானால், இயல்பாகவே அதை மற்றவருடன் பகிர்ந்துகொள்வதை நீங்கள் தவிர்க்க முடியாது. மிகவும் அற்புதமான ஒன்று உங்களுக்குக் கிடைத்தால் அதை பகிர்ந்துகொள்ளத் தோன்றாதா என்ன? உங்களுக்கு கணக்கிடக் கூடிய விஷயங்களைத் தான் பகிர்ந்துகொள்ளத் தோன்றாது. வாழ்க்கையில் கணக்கிட முடியாத சில அம்சங்கள் இருப்பதை நீங்கள் புரிந்துகொண்டால், அவை என்றுமே குறைவதில்லை என்று உணர்வீர்கள். மதிப்பிட்டு சேமித்து வைக்கக் கூடிய பொருட்கள்தான் ஒரு நாள் சென்று விடுமோ என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். ஒரு கோடி ரூபாயை சேமித்து நீங்கள் வைத்திருந்தால், அதை வெளியே எடுத்தால் செலவழிந்துவிடும் என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும். உங்களுக்குள் மகிழ்ச்சி இருந்தால், பரவசம் இருந்தால், ஞானோதயம் இருந்தால் அது செலவழியாது, எனவே பூட்டி வைக்கத் தேவையில்லை என்று அறிவீர்கள். அப்பொழுதுதான் உதவிக்கரம் நீட்டி என்ன தேவையோ அதை உங்களால் செய்ய முடியும்.
      இந்த உலகிற்கு நீங்கள் செய்ய வேண்டியது உங்களுக்குப் பிடித்தமானது அல்ல. இந்த உலகிற்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய வேண்டும்? உங்களுக்கு எது பிடித்ததோ அதைச் செய்யாமல் எது தேவையோ அதைத் செய்ய வேண்டும். குறிப்பாக மேற்கத்திய கலாச்சாரங்களில் இதை மாதிரி தவறான பிரச்சாரம் செய்கிறார்கள், “உங்களுக்கு விருப்பமானதைச் செய்வதே சுதந்திரம்.”
      உங்களுடைய விருப்பு வெறுப்புகள் என்பது ஒரு கட்டுப்பாட்டு நிலை. உங்களுக்கு விருப்பமானதைச் செய்ய முடியவில்லையென்றால் வேதனைப்படுவீர்கள். நீங்கள் வெறுப்பதைச் செய்ய நேர்ந்தால் வேதனைப்படுவீர்கள், இது ஒரு கடுமையான கட்டுப்பாடு, ஒரு பொறி என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய விருப்பங்களுக்காகவே உங்கள் வாழ்க்கையை நீங்கள் செலவழித்தால், ஒரு ஆழமான பொறிக்குள் சிக்கிக்கொள்வீர்கள். உங்களுடைய விருப்பங்ள் எந்நேரமும் உங்களைத் துன்புறுத்திக்கொண்டே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
      உங்களுக்கு என்ன பிடிக்கும் என்பதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். முதலில் அந்த மாதிரி ஒரு மனநிலையை உருவாக்காதீர்கள். என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். தேவையானதை நீங்கள் செய்துகொண்டே இருந்தால், எந்நேரமும் எல்லாம் நன்றாகவே இருக்கும். கட்டுப்பாடு என்ற ஒன்றிற்கு இடமே இல்லை. இயல்பாகவே நீங்கள் விழிப்புணர்வு நிலையை அடைந்து விடுவீர்கள். வாழ்க்கையை அனுபவிக்க ஒரே ஒரு வழி விழிப்புணர்வு நிலையடைவதுதான். உங்கள் விழிப்புணர்வு குறைந்து கொண்டே போனால் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்க முடியாது.
      நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தால்தான் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முடியும். உண்மையான விழிப்புணர்வுடன் இருந்தால் எல்லாமே அற்புதமாக இருக்கும். நீங்கள் விழிப்புணர்வு இழந்துவிட்டால் இறந்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
      எனவே எவ்விதமான வாழ்க்கை வாழ்வது என்பது உங்கள் விருப்பமாக இருக்கக் கூடாது. வாழ்வா சாவா என்பதைப் பற்றிதான் இருக்க வேண்டும். ஏனென்றால் விழிப்புணர்வு ஒன்றுதான் வாழ்க்கையை நடத்திச் செல்லும்.
      விழிப்புணர்வில்லாத நிலையில் நீங்கள் இருந்தால் மரணத்தை நோக்கி தவணை முறையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கையில் கணக்கிடக்கூடிய விஷயங்களில் நீங்கள் அதிக நேரம் செலவழித்தால் நீங்கள் மேலும் மேலும் விழிப்புணர்வில்லாத நிலையடைகிறீர்கள்.
      கர்நாடகாவில் ஒர் அற்புதமான துறவி இருந்தார். அல்லமா மஹா பிரபு என்று பெயர். பல்லாயிரக்கணக்கான கவிதைகள் எழுதியவர். ஒரு கவிதையில் அவர் இப்படி வருந்துகிறார் “ஒரு மனிதன் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்பொழுது கூட அவனுடன் பேச முடியும். ஒருவனைப் பாம்பு கடித்து விட்டால் அந்த நிலையில் கூட அவனுடன் பேச முடியும். ஆனால் பணம், செல்வம் முதலியவை ஒரு மனிதனைக் கடித்து விட்டால் அவனுடன் பேசவே முடியாது ஏனென்றால் அவன் உணர்விழந்த நிலையில் இருப்பான்,” என்கிறார்.
      கையில் கொஞ்சம் காசு இருந்தால் அது நிலைமையை எளிதாகவும், சாதாரணமாகவும் ஆக்குகிறது. அதற்கு பின்விளைவு எதுவும் இல்லை. உங்களால் கணக்கிட முடியாதவையே வாழ்க்கையில் வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன. எனவே வாழ்க்கையில் கணக்கிட முடியாதவற்றில் உங்கள் வாழ்க்கையை செலவழியுங்கள். என்ன செய்தாலும், நீங்கள் இந்த உலகத்திற்கு பெரிய அர்ப்பணிப்பாக இருப்பீர்கள்.
‍                                               சத்குரு. வாழ்கவளமுடன்!

1 comment:

S. Robinson said...

தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் (www.tamiln.org) திரட்டியிலும் இணையுங்கள்.

Post a Comment