Tuesday, May 31, 2011

கருத்து ஆனந்தம்


      ஒரு முறை ஒரு விவசாயி தன்னுடைய கழுதையை விற்று விடத் தீர்மானித்தான். அருகிலுள்ள கிரமாத்துக்குத் தன் மகனையும் அழைத்துக் கொண்டு சென்றான். அவர்கள் இருவரும் கழுதையை இழுத்துக் கொண்டு நடந்தே போனார்கள். வழியில் செல்லும்போது சில வழிப் போக்கர்கள் இவர்களைப் பார்த்துச் சிரித்தனர். பிறகு, “அந்த முட்டாளைப் பாருங்கள்! இருவருமே நடந்து போகிறார்கள்! யாராவது ஒருவர் கழுதையின் மீது சவாரி செய்யலாமே”, என்று கேலியாகச் சொன்னார்கள். அதனால், தன் மகன் கழுதையின் மீது ஏறி உட்காரட்டும் என்று விவசாயி தீர்மானித்தான். மகன் கழுதை மீது சவாரி செய்ய விவசாயி பயணத்தைத் தொடர்ந்தான்.
      சிறிது தொலைவு சென்ற பிறகு, வேறு சிலர் பார்த்தனர். வயதான தந்தை நடந்து வர இளவயது மகன் இவ்வாறு கழுதையின் மீது அமர்ந்து வருகிறானே என்று இவர்களைக் கோபித்துக் கொண்டனர். அவர்கள் பேச்சைக் கேட்டவுடன் அவர்களைத் திருப்தி செய்ய உடனே மகன் கீழிறங்கித் தந்தையைக் கழுதையின் மீது உட்காரச் செய்தான். தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். இன்னும் சிறிது தொலைவு சென்றதும், வீட்டுவாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த சில முதிய பெண்களைப் பார்த்தனர். அந்தப் பெண்கள், “தான் வசதியாக உட்கார்ந்து கொண்டு அந்த முதியவன் மகனை நடந்து வரச் சொல்லிக் கொடுமைப்படுத்துகிறானே”, என்று விவசாயியைக் குற்றம் சாட்டினார்கள். விவசாயிக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. தன் மகனையும் தன்னோடு கழுதையின் மீது அமர்த்திக் கொண்டான்.
      இப்போது தந்தையும் மகனும் மகிழ்ச்சியாகக் கழுதையின் மீது அமர்ந்து பிரயாணத்தைத் தொடர்ந்தனர். வயலில் வேலை செய்து கொண்டிருந்த சில உழவர்கள் இவர்களைப் பார்த்தனர். “எத்தகைய கொடூரமானவர்கள்! பாவம், அந்தக் கழுதை, கண்டிப்பாகச் சுமை தாங்காமல் நொடிந்து போகும்”, என்று விமர்சித்தார்கள். இதைக் கேட்டவுடன் தந்தையும் மகனும் உடனே கழுதையின் மீதிருந்து கீழே குதித்தார்கள். கழுதையைத் தூக்கிக் கொண்டு செல்வது தான் சிறந்தது என்று அவர்கள் இருவரும் தீர்மானித்தனர். மிகவும் சிரமப்பட்டுக் கழுதையின் கால்களைக் கட்டியபிறகு, ஒரு கொம்பில் அதைக் கட்டி அதைத் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு அவர்கள் தொடர்ந்து நடந்தனர். கிராமத்தை அடைவதற்கு முன்னால் ஆற்றின் மீதிருந்த ஒரு பாலத்தை அவர்கள் கடக்க வேண்டியிருந்தது.
      விவசாயியும் அவன் மகனும் மிகவும் சிரமப்பட்டுக் கழுதையைத் தூக்கிக் கொண்டு வரும் வினோதக் காட்சியை, ஆற்றுக்கு அக்கரையில் இருந்த குழந்தைகள் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். பெரிய சத்தத்தைக் கேட்டுப் பயந்து போன கழுதை பெரிதாக மூச்சு விட்டது. அதைத் தூக்கிக் கொண்டு வந்த தந்தை, மகன் இருவரின் பிடியும் நழுவியது. அந்தப் பரிதாபமான கழுதை ஆற்று நீரில் தூக்கி எறியப்பட்டது! ஏமாற்றமடைந்த விவசாயி வெறுங்கையுடன் வீடு திரும்பினான்.
      ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து. எல்லோரையம் திருப்திப் படுத்த முடியாது. அவ்வாறு திருப்தி படுத்த ஆரம்பித்தால், இந்த விவசாயிக்கு நேர்ந்த கதி தான் எல்லோருக்கும். அடுத்தவர் கருத்துக்காக மட்டும் வாழ ஆரம்பித்தால், அதில் ஆனந்தம் ஏது? சிரமம் தான் எற்படும். சுதந்திரமாக வாழ்வதே, நம் வாழ்க்கையை நாமே தீர்மானித்து அதற்கேற்ப்ப வாழ்வதே ஆனந்தம்.

நிரந்தர எதிரி ஆன‌ந்தம்


      “நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு”. இரண்டும் ஒன்றாகி விட முடியுமா? நீங்கள் எத்தனைபேரை வேண்டுமானாலும் சுலபமாக முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை.
      பள்ளிக்கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண் தனது முப்பத்துஐந்து வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஒரு புதிர் போட்டாள். “அப்பா.. ஒரு குட்டிக் குரங்கு… தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு… அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு… காட்டாத்து வெள்ளம்… திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது… அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது.. பயங்கர வெள்ளம் கீழே… அது எப்படித் தப்பிக்கும் சொல்லுங்கள்?” என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.
      அரைமணி நேரம் மாறி  மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். “அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும் … தெரியலை, நீயே சொல்லு” என்றார் மகளிடம். “ஆம்… இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை… அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?” என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள்.
      அந்தச் சின்னப் பெண். அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை; ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம் தான் எங்கும் நடக்கிறது.
      பிறரை வாய் மூடச் செய்வது, செயலிழக்கச் செய்வது, தோற்றுப் போகச் செய்வது, ஆளவிடாமல் தடுப்பது, முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது… இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறோம். இந்தத் தவறுதலான எண்ணத்திலிருந்து தயவு செய்து வெளியே வரவேண்டும். பிறரைத் தோற்கடிப்பது லட்சியமல்ல… நமது வெற்றியே நமது குறிக்கோள் என்கிற தெளிவு இருக்க வேண்டும்.
      நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஒரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.
      “நாம் வெற்றி பெறுவது வேறு, பிறரைத் தோற்கடிப்பது வேறு, பிறரைத் தோற்கடிப்பதே வெற்றி என்று தவறுதலாக அர்த்தம் கொள்ள வேண்டாம்”.

Monday, May 30, 2011

விருப்பு‍-வெறுப்பு அமைதி ஆனந்தம்


      சில விஷயங்கள் எனக்கு வசதியாகவே இல்லை” என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறோம். வேண்டிய வசதி வாய்க்காததால், வாழ்க்கை சிலருக்கு நரகமாய் இருக்கிறது. ஒரு உண்மை தெரியுமா? உள்ளபடியே வாழ்க்கை எப்போது வசதியாகுமென்றால், சில வசதிகளுக்கான தேவைகள் நம் மனதிலிருந்து நீக்கும் போதுதான்.
      “ஒரு காலத்தில் விஷமாய் இருந்தது. இன்னொரு காலத்தில் அமுதம்”, “ஒரு காலத்தில் அமுதமாய் இருந்தது இன்னொரு காலத்தில் விஷம்” என்று சொல்லக் கேட்டிருக்கிறோம். இதுதான் வாழ்க்கையின் அடிப்படை உண்மை. விருப்பு, வெறுப்பு என்று சிலவற்றை வைத்துக் கொண்டிருக்கும் வரை, வாழ்க்கை போராட்டமாகத்தான் இருக்கும்.
      வாழ்க்கையை, தன் தன்மையோடு முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ளுகிறபோது, வசதி குறைவு என்கிற ஒன்றே வராது. மாறாக ஆனந்தம் மட்டும்தான் நிலைத்திருக்கும். சிலபேர் நிலையான மகிழ்ச்சியை ஆனந்தம் என்று சொல்லுவதைவிட பேரானந்தம் என்று சொல்வதில் கூடுதல் சுகம் காண்கிறார்கள். ஆனந்தம் என்றாலே அது உச்சநிலைதான். பேரானந்தம் என்கிற சொல் மிகையானது. ஆனந்தம் என்பதே பொதுவானது. மகிழ்ச்சிக்கும், ஆனந்தத்திற்கும் இருக்கும் அடிப்படை வேற்றுமை அதுதான்.
      மகிழ்ச்சியை நீங்கள் விலைக்கு வாங்கலாம். அது நீண்டகாலம் நிலைத்திருக்காது. உதாரணத்திற்கு இரண்டு சக்கர வாகனம் வைத்திருப்பவர் ஒரு கார் வாங்கினால் மகிழ்ச்சியடைவார். அந்தக் கார் நிறைய தொந்தரவு தரத் தொடங்கினால், அதே கார் அவருடைய துன்பத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஆனால், ஆனந்தம் என்பது நம் உள்ளிருந்து ஏற்படுவது. இந்த ஆனந்தம், இன்பம், துன்பம் இரண்டுக்குமே அப்பாற்பட்டது.
      ஒரு மனிதன் எப்போதும் ஆனந்தமயமாக இருப்பானேயானால் சராசரி வாழ்க்கையின் இன்ப, துன்பங்கள் அவனைப் பாதிப்பதில்லை. அதற்காக வாழ்க்கையின் அன்றாட அம்சங்களிலிருந்தும் அவன் விடுபட்டிருப்பான் என்பதும் அர்த்தமல்ல.
      ஒரு மரணம் நிகழ்கிறதென்றால் அதற்காக வருந்திக்கொண்டே அவனால் ஆனந்தமாக இருக்க முடியும். அவனுடைய அடிப்படைத் தன்மையாகிய ஆனந்தத்தை யாராலும், எந்த சம்பவத்தாலும் மாற்ற முடியாது. அதற்கு ஒரே வழி விருப்பு, வெறுப்பு போன்றவற்றைக் கடந்து வருவது.
      சில விஷயங்கள் நமக்கு வேண்டும், வேண்டாம் என்கிற போதே சில எதிர்பார்ப்புகள், தொடங்கி விடுகின்றன. அந்த எதிர்ப்பார்ப்புகள் அகந்தையின் காரணமாக எழுபவை. அகந்தை உங்களைக் கட்டி வைக்கிற ஒரு கயிறு போல. அதனை அறிவு என்கிற நெருப்பு கொண்டு நீங்கள் எரித்து விட முடியும். எரித்த போதும் அது ஒரு கயிறு போலத்தான் தோன்றுமே தவிர, அந்த கயிற்றால் யாரையும் கட்டிவிட முடியாது.
      அகந்தை என்கிற கயிறு எரிக்கப்படாத வரையில் அது நமை வாழ்வில் கட்டிப்போடுகிறது. அதை எரித்தபிறகு அகந்தை இருப்பது போல் தோன்றினாலும், அதனால் நம்மை எதுவும் செய்ய இயலாது. அப்போதுதான் முழுமையான, ஆனந்தத்தை நம் மனம், உணரத் தொடங்கும்.
      உள்ளுணர்வில் ஆனந்தம் இருக்கிறபோது, வாழ்வின் சகல அம்சங்களிலும், நம்மால் முழுமையாக பங்கேற்க இயலும். வீண் விவாதங்கள், தேவையில்லாத வாக்குவாதங்கள் போன்றவற்றில் நாம் ஈடுபட மாட்டோம். ஒரு முட்டாளும் எப்போதும் அமைதியாக இருப்பான், முற்றும் உணர்ந்த ஞானியும் அமைதி நிலையிலிருப்பார். ஆனால் இருவரின் அமைதியும் ஒன்றே அல்ல.
      முட்டாளின் அமைதிக்கும், ஞானியின் அமைதிக்கும் மூலத்திலேயே வேறுபாடு உண்டு. ஒருமுட்டாள் எப்படிப் பேசுது என்று தெரியாததால் அமைதியாக இருக்கிறான். ஒரு ஞானியோ வெறுமனே விவாதிப்பதால் பயனில்லை என்று உணர்ந்து அமைதியாக இருக்கிறார். ஒரு முது மொழி உண்டு. “ஒரு மனிதன், தான் எண்ணுவது சரி என்று உணர்ந்தும், அமைதியாக இருப்பாரேயானால் அவர் இறைத்தன்மைக்கு மிக நெருக்கமானவர்” என்று, இது மிக முக்கியம்.
      நம் கருத்து சரியென்று தெரிந்துவிட்டால், வாழ்க்கை முழுக்க விவாதித்துக் கொண்டு இருக்கத்தான் தோன்றும். ஆனால் நம் உள்ளுணர்வுக்கு சரியென்று பட்டாலே போதும். அதை உலகுக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
     விருப்பு, வெறுப்பால் ஏற்படுகிற தீமை என்னவென்றால், நமது கண்ணோட்டங்களுக்கு ஏற்ப இந்த உலகம் முழுவதையும் வளைப்பதற்கு நாம் வாழ்க்கை முழுவதும் முயன்று கொண்டிருப்போம். விருப்பு, வெறுப்பின் அடிப்படையில் உலகத்தைப் பார்க்கிறபோது, நிபந்தனை இல்லாத வாழ்க்கையை நம்மால் முழுமையாக நுகர முடியாது. 
      விருப்பு, வெறுப்பு ஆகிய நிலைகளைக்கடந்து நிற்கிற மனிதர், வாழ்க்கையிலிருந்து விலகி ஓடுபவரல்ல. வாழ்க்கையில் முழுமையாக ஈடுபடுபவர். ஆனந்தமானவர். ஆனந்தத்தில் திழைப்பவர்...

Saturday, May 28, 2011

புத்திசாலித்தனம் அமைதி ஆனந்தம்


      பத்து ரூபாய் சம்பாதிப்பவன் நூறு ரூபாய் ஈட்டிவிட்டால், அது அவனைப் பொறுத்தவரை வெற்றி. ஆயிரம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டு இருப்பவன் கண்ணோட்டத்தில் அது தோல்வி!
      சமூக அளவுகோல்களால் அளந்து பார்க்கப்படும் வெற்றிக்கும் மனிதனின் அடிப்படையான புத்திசாலித்தனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வாழ்க்கையை அமைதியாகவும் ஆனந்தமாகவும் உயிர்ப்புடனும் வைத்திருப்பதே உண்மையான வெற்றி. உங்களுடைய உள் சூழ்நிலையையும் வெளிச் சூழ்நிலையையும் நீங்கள் வெற்றிகரமாகக் கையாள்வதற்கு அடிப்படைப் புத்திசாலித்தனம் நிச்சயம் தேவை.
      புத்திசாலித்தனம் என்பது இன்றைய கல்வி மூலம் பெறப்படும் அறிவாற்றலை அல்ல; பல தரப்புகளிலிருந்து சேகரிக்கப்படும் விஷய ஞானத்தையும் அல்ல!
      புத்திசாலித்தனம் என்பது வாழ்க்கையைத் தோலுரித்து, அதன் அடிப்படை உண்மையை அறிந்துகொள்ளும் திறன். பக்குவத்துடனும் தெளிவுடனும் வாழ்க்கையை நடத்துவதற்கு இந்த புத்திசாலித்தனம் மிக மிக அவசியம்!
      ஒரு மனிதனிடம், புத்திசாலித்தனத்துடன் அமைதியும் சேர்ந்து இருந்தால் அவன் ஆனந்தமானவன்.
      அமைதி என்பது நம் உள்ளம் சார்ந்த விஷயமே. எந்த இடத்தில் இருந்தாலும் மனம் கூடவே தான் இருக்கும். அமைதியைத் தேடி மலைகளுக்குச் செல்கிறீர்கள் என்றால், மலை அமைதியாக இருப்பதாகத் தான் அர்த்தமே தவிர நீங்கள் அமைதியாக இருப்பதாக அர்த்தம் அல்ல. இரைச்சல் மிக்க சந்தைக்கு நடுவிலும் அமைதியாக இருக்க முடிந்தால் தான் நீங்கள் அமைதியானவராக இருப்பதாக அர்த்தம்.
      மகிழ்ச்சியாக,ஆனந்தமாக‌ இருக்கும் போது, உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு நீங்கள் அற்புதமான மனிதர் தான். ஆனால், மகிழ்ச்சியின்றி இருக்கும்போது, இந்த உலகுக்கு நீங்கள் ஒரு ஆபத்தான மனிதர். நமது மனநிலை நாம் இருக்கும் சூழ்நிலையை வெகுவாகப் பாதிக்கிறது.
      உங்கள் வாழ்வின் மிக அழகான தருணங்கள் நீங்கள் மகிழ்ச்சியைத் தேடிக் கொண்டு இருந்த கணங்கள் அல்ல. நீங்கள் மனமகிழ்ச்சியை ஆனந்தத்தை, வெளிப்படுத்திய நல்ல தருணங்களே. அமைதியும் ஆனந்தமும் வாழ்வின் உச்சக்கட்ட நிலை அல்ல. அவை வாழ்வின் தொடக்கமே. அந்த தொடக்க கட்டம் உங்களை உச்சகட்ட நிலையான பேரானந்த நிலைக்கு தானாகவே அழைத்துச் செல்லும்.

Friday, May 27, 2011

துன்பம் போதை ஆனந்தம்


      துன்பம் என்பது, தன்னுணர்வற்ற மனதின் ஒரு நிலை. நாம் என்ன செய்கிறோம், நாம் என்ன நினைக்கிறோம், நாம் என்ன உணர்கிறோம் என்கின்ற விழிப்புணர்வு இல்லாததால், நாம் துன்பம் அடைகிறோம். அதனால்தான் ஒவ்வொரு நொடிப்பொழுதும் நாம் நம்முடனேயே முரண்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமது செயல் ஒரு திசையில் செல்கிறது, சிந்தனை மற்றொரு திசையில் செல்கிறது, உணர்வுகள் வேறு எங்கோ செல்கிறது. நாம் பிரிந்து பிரிந்து செல்கிறோம். நாம் மேலும் மேலும் பிளவுபட்டுச் செல்கிறோம். அதுதான் துன்பம் ஆகும். நாம் நமக்குள் ஒருங்கிணைந்து இருப்பதில்லை. நாம் நமக்குள் ஒற்றுமையை இழந்து விட்டோம். நாம் முற்றிலுமாக மையத்தில் இல்லாமலும், வெறுமனே வெளிவட்டத்திலுமாக இருக்கிறோம். எனவே, இயல்பாகவே ஒத்திசைவு இல்லாததொரு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவும், துக்கமானதாகவும், ஏதோ ஒருவித சுமை போன்றும், ஒரு கஷ்டமாகவும் இருக்கிறது. அதிகபட்சமாக, ஒருவர் இந்த துன்பத்தை கொஞ்சம் வேதனை குறைந்ததாக ஆக்கிக் கொள்ளலாம். மேலும், வாழ்க்கையில் ஆயிரக்கணக்கான வலி நிவாரணிகள் கிடைக்கின்றன.
      மக்கள் துன்பத்தில் வாழ்கிறார்கள். அதில் இருந்து விடுபட இரண்டு வழிகள்தான் உள்ளன. அவர்கள் தியானம் செய்பவர்களாக, உஷாரானவர்களாக, விழிப்புணர்வு உள்ளவர்களாக, தன்னுணர்வு பெற்றவர்களாக ஆக முடியும். ஆனால், அது மிகவும் கடினமான வேலை. அதற்கு தைரியம் தேவை. அல்லது இன்னொரு மலிவான வழி என்னவென்றால், நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ, அதைவிட இன்னும் அதிகமான தன்னுணர்வு இழந்த நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டு, அந்த நிலையில் நீங்கள் அந்த துன்பத்தை உணராமல் இருக்க முடியும். உங்களை முற்றிலும் புலன்நுகர்ச்சி அற்றவர்களாக ஆக்குகின்ற ஒரே ஒரு பொருளை, ஏதோ ஒரு மயக்க மருந்தை, ஏதோ ஒரு வலி நிவாரணியை, போதைப்பொருளை எடுத்துக் கொள்வதால், அது உங்களை தன்னுணர்வு இழந்த நிலைக்கு கொண்டு சென்றுவிடுவதால், நீங்கள் அந்த தன்னுணர்வு அற்ற நிலையில் உங்களது கோபம், துன்பம், அர்த்தமற்ற தன்மை இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
      இந்த இரண்டாவது வழி, உண்மையான வழி அல்ல. இந்த இரண்டாம் வழி, உங்களது துன்பத்தை கொஞ்சம் சௌகரியமானதாகவும், கொஞ்சம் தாங்கக்கூடியதாகவும், கொஞ்சம் வசதியானதாகவும் மட்டுமே ஆக்கக் கூடியது. ஆனால் இது உங்களுக்கு உதவிகரமாக இருக்காது. இது, உங்களை மாற்றியமைக்காது. உங்களுக்குள் மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால், அது தியானத்தால் மட்டுமே முடியும். ஏனெனில் தியானம் ஒன்றுதான் உங்களை விழிப்புணர்வு உள்ளவர்களாக ஆக்குகின்ற வழி.
      இங்கு, என்னுடைய முயற்சி என்னவென்றால், உங்களை இந்த துன்பத்தைக் கடந்து அதற்கு அப்பால் கொண்டு செல்வதுதான். நீங்கள் துன்பத்தை நீங்கள் விரும்பிய வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள மட்டுமே முடியும் என்பது கிடையாது. நீங்கள் இந்த துன்பத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெறுகின்ற ஒரு சாத்தியம் உள்ளது. ஆனால், அந்தப் பாதை கொஞ்சம் கடினமானது. ஆனால் அந்தப் பாதை சவாலானது. அதில் நீங்கள், உங்களது உடல் குறித்த விழிப்புணர்வுடன் மட்டுமல்ல; அதனால் நீங்கள் செய்கின்ற காரியங்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
      ஒரு நாள் புத்தர் தனது காலை சொற்பொழிவை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அந்த நாட்டின் அரசரும் அதைக் கேட்பதற்கு வந்திருந்தார். அவர், புத்தரின் முன்னால் உட்கார்ந்து கொண்டிருந்தார். மேலும் அவர், தனது பெருவிரலை ஆட்டிக் கொண்டே இருந்தார். புத்தர், பேசுவதை நிறுத்திவிட்டு, அரசரின் பெருவிரலைப் பார்த்தார். புத்தர் தனது பெருவிரலைப் பார்ப்பதைக் கண்டவுடன், அரசர் தனது பெருவிரல் அசைப்பதை நிறுத்திவிட்டார். புத்தர் தனது பேச்சை தொடர்ந்தார். அரசரும் மீண்டும் தனது பெருவிரலை அசைக்க ஆரம்பித்தார். உடனே புத்தர் அவரிடம், “ நீங்கள் ஏன் அப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அரசர், “நீங்கள் பேசுவதை நிறுத்திவிட்டு, எனது பெருவிரலை பார்க்கும் போதுதான் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்கின்ற விழிப்புணர்வு எனக்கு வருகிறது. மற்றபடி நான் எனது தன்னுணர்வுடன் இருப்பதே இல்லை.” என்று பதில் கூறினார். அதைக் கேட்ட புத்தர், “அது உங்களது பெருவிரல்தானே! அப்படியிருக்கும்போது, அது அசைவதைக் கூட உங்களால் தன்னுணர்வுடன் கவனிக்க முடியாதா? இப்படியிருந்தால், நீங்கள் ஒருவரைக் கொலை செய்துவிட்டும் கூட அதைப் பற்றி எந்தவிதமான விழிப்புணர்வும் இல்லாமலும்கூட இருக்கலாமே!” என்றார்.
      மேலும், இது போன்றதொரு வழியில் தான் மக்கள் கொலை செய்யப் படுகின்றனர். மேலும், கொலைகாரர்களும், தாங்கள் என்ன செய்கிறோம் என்கின்ற தன்னுணர்வு இல்லாமல் செய்கின்றனர். நீதிமன்றங்களில் அநேகமுறை கொலை செய்தவர்கள் தாங்கள் கொலை செய்ததை முழுமையாக மறுத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகத் தான் எண்ணப் பட்டது. ஆனால் சமீபகால கணடுபிடிப்புகள் மூலம், அவர்கள் ஏமாற்றவில்லை என்றும், அவர்கள் அதை தங்களது சுயநினைவு இழந்த நிலையில் செய்து விடுகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த நொடிப் பொழுதில், அவர்கள் அந்த அளவுக்கு ஆக்ரோஷத்துடனும், அந்த அளவுக்கு கோபத்துடனும் இருந்துவிட்டதால், அவர்கள் அந்த ஆக்ரோஷத்தின் பிடியில் அகப்பட்டுக் கொள்கின்றனர். மேலும் நீங்கள் ஆக்ரோஷம் அடையும்போது உங்களது உடலில் சில வெறியூட்டும் விஷங்கள் சுரக்கின்றன. அதனால் உங்களது இரத்தம் வெறியூட்டப் படுகிறது. ஆக்ரோஷத்தில் இருப்பது என்பது தற்காலிகமாக புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதைப் போன்றது. இதனால் அந்த மனிதர் அந்த சம்பவத்தைப் பற்றி முழுமையாக மறந்துப் போய்விடுவார். ஏனெனில் அவருக்கு அந்த சம்பவம் எப்படி நடந்தது என்கின்ற விழிப்புணர்வு இருக்காது. இப்படித்தான் மக்கள் காதல் வசப்படுவதும், ஒருவரை ஒருவர் கொலை செய்வதும், தற்கொலை செய்து கொள்வதும், இது போன்ற காரியங்களைச் செய்வதும் நடக்கிறது.
      எனவே, நீங்கள் உங்களது உடல்குறித்து நிறைகவனத்துடன், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தான் முதல்படி. கொஞ்சம் கொஞ்சமாக ஒருவர் தனது ஒவ்வொரு அசைவையும், ஒவ்வொரு நகர்வையும் குறித்து விழிப்புணர்வு கொள்ள முடியும். மேலும் இப்படி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பித்துவிட்டால், ஒரு அதிசயம் நடக்கும்; இதற்கு முன்புவரை நீங்கள் செய்துவந்த அநேக காரியங்கள் வெறுமனே மறைந்து போகும். உங்களது உடல் ஓய்வுடன் இருக்கும். உங்களது உடல் ஒத்திசைந்துவிடும், உங்களது உடலில் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும், உங்களது உடலில் ஒரு மெல்லிய சங்கீதம் துடிக்கும்.
      அதன்பின்னர், உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க ஆரம்பியுங்கள். நீங்கள், உங்களது உடல் மீது செலுத்திய விழிப்புணர்வை இப்போது அப்படியே உங்களது எண்ணங்களின் மீது செலுத்த வேண்டும். உங்களது எண்ணங்கள், உங்களது உடலைவிட மிகவும் கண்ணுக்கு புலப்படாதவை. மேலும், அவை அபாயகரமானதும்கூட. மேலும், நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்றுவிட்டால், அதன்பின்னர் உங்களுக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து, நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். எந்த நேரத்திலும் உங்கள் மனதினில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை எழுத ஆரம்பித்தால், உங்களுக்கு அது மிகப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுக்கும். “இதுதான் எனக்குள் நடந்து கொண்டிருக்கிறதா?” என்று நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள். வெறும் பத்து நிமிடங்கள் வரை உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்று வெறுமனே குறித்து வைத்துப் பாருங்கள். அப்போது வேண்டுமானால், யாரும் உள்ளே வராதபடிக்கு கதவை மூடி தாழிட்டுக் கொள்ளுங்கள். எனவே, அப்போது நீங்கள் நேர்மையுடன் உங்களுக்குள் ஓடுகின்ற எண்ணங்களை எழுத முடியும். மேலும் எழுதி முடித்து அதை படித்த பின்னர், அதை தீயிட்டுக் கொளுத்துவதற்கு ஒரு தீப்பெட்டியையும் தயாராக வைத்திருங்கள். எனவே உங்களைத் தவிர வேறு யாரும் அதில் உள்ளதை அறிய முடியாது. அதனால் அப்போது நீங்கள் நேர்மையுடன் இருந்து, உங்களுக்குள் என்னென்ன எண்ணங்கள் வருகின்றனவோ, அதையெல்லாம் எழுதி விட வேண்டும். அதை திரித்துக் கூறாதீர்கள், அதை மாற்றி விடாதீர்கள், அதை வெட்டிச் சுருக்கிவிடாதீர்கள். அதை அப்படியே நிர்வாணமானதாக காகிதத்தில் எழுதுங்கள். சரியாக அப்படியே எழுதுங்கள்.
      அதன்பிறகு, பத்து நிமிடங்கள் கழித்து அதைப் படித்துப் பாருங்கள். அப்போது நீங்கள் உங்களுக்குள் ஒரு பைத்தியக்கார மனம் இருப்பதைக் காண்பீர்கள். இப்படிப்பட்ட முழு பைத்தியக்காரத்தனம் ஒன்று நமக்குள் ஒரு அடி நீரோட்டம் போல் ஓடிக் கொண்டிருப்பதை நாம் ஒருபோதும் கவனிப்பதில்லை. உங்களது வாழ்க்கையின் முக்கியமான விஷயங்களை அது பாதிக்கும். அது எல்லாவற்றையும் பாதிக்கும். ஆனால், இதுதான் உங்களது ஒட்டுமொத்த வாழ்வாகவும் இருந்துவருகிறது!
      ஆகவே, இந்த பைத்தியக்காரத்தனம் மாற்றப்பட வேண்டும். மேலும், விழிப்புணர்வின் அற்புதம் என்னவென்றால், நீங்கள் விழிப்புணர்வுடன் இருப்பதைத் தவிர வேறு எதுவும் நீங்கள் செய்ய வேண்டியதில்லை என்பதுதான். நீங்கள் அதை கவனிக்கின்ற விஷயமே அதை மாற்றிவிடும். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வகைக்குள் விழ ஆரம்பித்து விடும். அதன் பின்னர், அவைகளில் குழப்பம் இருக்காது. அவைகள் குழப்பங்கள் இல்லாத இந்த பிரபஞ்சம் போல ஆகிவிடும். எனவே அதன்பிறகு மீண்டும் அங்கே ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும்.
      மேலும், இவ்வாறு உங்களது உடலும், உங்களது மனமும் அமைதியடைந்து விட்டால், அப்போது அவைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒத்திசைந்து செல்வதையும் நீங்கள் காண்பீர்கள். அங்கே ஒரு பாலம் அமைந்து விடும். இப்போது உங்களது உடலும் மனமும் வெவ்வேறு திசையில் ஓடாது. அவைகள் வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யாது. முதல் முறையாக அவைகள் இரண்டும் ஒத்துப் போகும். மேலும், அவைகளின் இந்த ஒத்து போகும் செயலானது நீங்கள் அதற்கடுத்த மூன்றாவது படிக்கு செல்வதற்கு மிகவும் உதவும். அதாவது, மூன்றாவதாக நீங்கள் உங்களது உணர்வுகள், மனக் கிளர்ச்சிகள், மனநிலைகள் ஆகியவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருப்பதற்கு ஏதுவாக இருக்கும். இந்த உணர்வுகள்தான் உங்களுக்குள் உள்ள கண்களுக்குப் புலப்படாத, அதே சமயம் மிகவும் கடினமானதொரு அடுக்கு. ஆனால் நீங்கள் உங்களது எண்ணங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க முடியுமெனில், அதன்பின்னர் இது இன்னும் ஒரே ஒரு படிதான் அதிகம். உங்களது மனநிலையை, உங்களது மனக்கிளர்ச்சியை, உங்களது உணர்வுகளை பிரதிபலிக்கும்போது, நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் போதும்.
      இப்படி நீங்கள் இந்த மூன்று நிலைகளிலும் விழிப்புணர்வுடன் இருந்துவிட்டால், அவைகள் எல்லாம் ஒரே விஷயமாக ஒன்று சேர்ந்துவிடும். மேலும், இவைகள் மூன்றும் இப்படி ஒன்றாக ஆகிவிட்டால், முற்றிலும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டால், உங்களால் இந்த மூன்றின் சங்கீதத்தையும் உணரமுடியும். அவைகள் ஒரு இசைக்குழு போல ஆகிவிடும். அதன்பின்னர்தான் நான்காவது விஷயம் நடக்கும். இந்த நான்காவது விஷயத்தை, நீங்கள் ஏதாவது செய்வதால் கொண்டு வரமுடியாது. அது தானாகவே நிகழ்வது. அது பூரணத்தின் வரமாகும். இந்த மூன்றையும் செய்தவர்களுக்கு கிடைக்கின்ற வெகுமதியாகும்.
      மேலும் இப்படி நான்காவதாக எழுகின்ற அந்த விழிப்புணர்வுதான் உங்களை ஞானமடைந்த ஒருவராக ஆக்கும். அப்போது ஒருவர் தனது விழிப்புணர்வு குறித்தே விழிப்புணர்வுடன் இருப்பார். இதுதான் நான்காவது படி. அது ஒருவரை புத்தராக ஆக்கிவிடும். ஞானமடைந்தவராக ஆக்கிவிடும். மேலும் இப்படி ஒருவர் விழிப்படைந்தால் மட்டுமே ஒருவர் பேரானந்தம் என்றால் என்ன என்று அறிந்து கொள்ள முடியும். உடலை அறிவது சுகம், மனதை அறிவது சந்தோஷம், உள்ளத்தை அறிவது மகிழ்ச்சி, நான்காவதாக அறியப்படுவது பேரானந்தம். எனவே பேரானந்தம்தான் நமது லட்சியம்; விழிப்புணர்வு தான் அதற்கான பாதையாகும். எல்லா நிலையிலும் ஆனந்தமாக வாழமுற்ப்படுவோமானால் பேரானந்தம் என்கிற நிர‌ந்தர ஆனந்த நிலை கிடைக்கும்.அதுவே ஒவ்வொரு மனித உயிரின் குறிக்கோளாக இருக்கவேண்டும். அதுதான் ஆனந்த வாழ்வு. அதுதான் ஞானவாழ்வு. அதுதான்  அனைத்து மகான்க‌ளின் வாழ்க்கை நிலை.
                         ...........................................ஓஷோ..................................................................

Tuesday, May 24, 2011

அயோக்யன்-நல்லவன் ஆனந்தம்


      ஒருத்தரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் எவ்வாறு தீர்மானிக்கிறீர்கள்! ஓருவன் மிகவும் போகிரித்தனம் பண்ணிக்கொண்டு இருப்பவன், மகா அயோக்யன், கொலை பாதகங்களுக்கு அஞ்சாதவன் மகளிடம் கேட்டீர்கள் என்றால் என் தந்தை மிகவும் நல்லவர் என்று சொல்லுவாள். அதே போல் மிகவும் நல்லவன் என்று சமுதாயத்தால் தீர்மானிக்கப்படும் ஒருவனிடம் கூட சில கெட்ட குணங்கள் இருக்கலாம்.
      ஆதலால் முழுவதுமாக நல்லவர்களும் கிடையாது, கெட்டவர்களும் கிடையாது. மனிதர்களை அவர்கள் எப்படியோ அப்படியே எற்றுக்கொள்ளப் பழக வேண்டும். அப்போது தான் நாம் என்றும் ஆனந்தமாக வாழ முடியும்.
      ஒரு முறை பிம்பிசாரன் என்ற அரசன், மாஹாவீர் என்ற மகானை சந்திக்க அவனுடைய மந்திரிகள் மற்றும் பரிவாரங்களுடன் வந்தான். அப்போது வழியில் அவனுடைய நண்பன் பிரசன்னகுமார் என்பவரை சந்தித்தான்.
      அவர் அரசனாக இருந்து பின்பு அனைத்தையும் துறந்து யோகியாக, மகாவீருடைய சிஷ்யனாக, ஞானவானாக இருந்தார். அவரை சந்தித்து விட்டு பின்பு மகாவீரிடம் வந்தான்.
      மாகவீரிடம் வந்த பிம்பிசாரன், அவரிடம் சுவாமி, மனிதர்கள் இறந்தபின்பு சொர்கத்துக்கு போவார்களா? நரகத்திற்க்கு போவார்களா? என்பதை எதை வைத்து தீர்மானிப்பது? உதாரணத்திற்க்கு என் நண்பன் பிரசன்னகுமார் அரசனாக இருந்தபோது, அனைத்து பாவகாரியங்களையும் கூசாமல் செய்தவன், ஆனால் இப்பொதோ அனைத்தையும் துறந்து ஞானவானாக இருக்கிறார். அவர் இறந்தால் சொர்கத்துக்கு போவாரா? அல்லது நரகத்திற்க்கு போவாரா?
      மகாவீர் அவரிடம், நீ பிரசன்னகுமாரைப் பார்த்தாயே அப்போது இறந்திருந்தால் அவர் நரகத்திற்க்கு போயிருப்பார்! ஆனால் இப்போது இந்த கணம் இறந்தால் சொர்கத்திற்க்கு போவார்! என்றார் மகாவீர்.
      பிம்பிசாரன் ஒருகணம் மிகவும் குழம்பிப்போனான். நாம் கேட்ட கேள்வி என்ன? இவர் சொல்லும் பதில் என்ன? உடனே அதை புரிந்துகொண்ட மகாவீர், பிம்பிசாரா, நீ சந்திக்கப் போனபோது உன்னுடைய பரிவரங்களுடன் போனாய், அதைப்பார்த்த அவருடைய மனதில் இதையெல்லாம் (அரசவாழ்வை)விட்டுவிட்டோமே என்ற எண்ணம் தோன்றி அவரை துன்புருத்தியது, அதை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார். அப்போது அவர் இறந்திருந்தால் நரகத்திற்க்கு போயிருப்பார், ஆனால் இவ்வாறு ஞான வாழ்விற்க்கு வந்தபிறகு சிந்தித்து விட்டோமே என்று வருந்தி மனதாற என்னிடம் மனதாலேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கின்றார். அதனால் அவர் இப்போது இறந்தால் சொர்கத்திற்க்கு போவார் என்று கூறினேன், என்றார் மகாவீர்.
      ஒரு மனிதன் சொர்கத்துக்கு போவானா? அல்லது நரகத்திற்க்கு போவானா? என்று நான் கூறவரவில்லை. மாறாக வாழும்போதே சொர்கம் நரகம் என்பதை நம் எண்ணங்கள் தான் தீர்மானிக்கின்றன. நல்ல எண்ணங்கள் நம்மை ஆனந்தமாகவும், கெட்ட எண்ணங்கள் துன்பத்துடனும் வாழவைத்துவிடுகின்றன. நாம் வாழும் போதே நல்ல எண்ணங்களால் ஆனந்தமாக‌ வாழவேண்டும்..........................
     

Monday, May 23, 2011

இறந்த காலம் ஆன்ந்தம்


      சத்குரு! "நான் என் இளமைக் காலத்தில் வெளியில் சொல்ல முடியாத சில தவறுகளைச் செய்திருக்கிறேன். நெருக்கமானவர்களிடம்கூடப் பலப் பொய்களைச் சொல்லி ஏமாற்றியிருக்கிறேன். இப்போது, உடல் ஓய்ந்து விட்டது. என்னைப்பற்றி முழுமையாகத் தெரியாத என் குடும்பத்தார் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையும், மரியாதையும் என்னை உறுத்துகின்றன.
      எவ்வளவுதான் முயன்றாலும், இறந்த காலத்தில் செய்த பிழைகள், தவறுகள் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து தாங்க முடியாத வருத்தத்தில் தள்ளுகின்றன. இதிலிருந்து மீள வழி இல்லையா ?"
      " சிறு வயதில் செய்ய முடிந்ததை எல்லாம் இப்போது செய்ய முடியவில்லையே என்று வருத்தம் வந்துவிடவில்லையே உங்களுக்கு ?
வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விஷயம் முக்கியமாகத் தோன்றுகிறது. அதற்கு முன்னுரிமை கொடுக்கும்போது, மற்றவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயல்களில்கூட ஈடுபடத் தோன்றுகிறது. யாரோ ஒருவரைக் கொலை செய்யும் ஒருவன்கூட அந்தக் கணத்தில் அதுதான் சரியான செயல் என்று கருதுவதால்தான் அப்படிச் செய்கிறான்.
      கோயிலுக்கு அழைத்துச் சென்று அப்பா மகனிடம் சொன்னார்,கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உனக்கு வேண்டியதைக் கேள். கொடுப்பார்."
      " நீங்கள் பிரார்த்தனை செய்து கேட்டால், அதையும் உங்களுக்குக் கொடுப்பாரா அப்பா?"
      " ஆம், மகனே. நிச்சயமாக!"
      மகன் இப்போது அப்பாவைச் சந்தேகத்துடன் பார்த்தான். "அதெப்படி அப்பா நடக்கும் ? நம் இரண்டு பேரில்யார் பேச்சை அவர் கேட்பார் ?"
      உலகம் அப்படித்தான். ஒரு விஷயத்தை இருவர் ஒரே மாதிரி பார்ப்பது இல்லை.தவறு என்று மற்றவர்கள் கருதியது அந்தக் கணத்தில் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் சந்தோஷம் கொடுத்திருக்கிறது. அதனால், அந்தச் செயலில் ஈடுபட்டீர்கள். எப்போது தவறு என்று மனதார உணர்ந்துவிட்டீர்களோ,அதை மறுபடியும் செய்ய மாட்டீர்கள்.
      ஆனால், நினைவுகள் சுமையாகத் தங்கி அவதிக்கு உள்ளாக்குகின்றன. நரகத்துக்குப் போய்விடுவோமோ, அல்லது வேறு ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று இப்போது பயம் வந்து விட்டது. இந்தப் பயம், குற்ற உணர்வு இதெல்லாம் மனதின் செயல்.
      நமக்கு ஏற்கனவே நடந்தது எல்லாம் ஞாபகங்களாகத் தங்கி விடுகின்றன. அந்த ஞாபகங்கள் மீது கட்டப்படும் கற்பனைதான் எதிர்பார்ப்பாக, குற்ற உணர்வாக, அச்சமாக எழுகிறது. கற்பனை என்று புதிதாக ஒன்றும் வரப்போவது இல்லை. நம் அனுபவத்தில் உள்ளதை அடிப்படையாகக் கொண்டு, ஏற்கனவே உள்ள ஞாபகங்களைச் சற்று மிகைப்படுத்தினால், அதுதான் கற்பனை.
      ஒரு சின்னப்பையன் தன் அம்மாவிடம் ஓடி வந்தான்.
      " அம்மா, நான் நீச்சலடிக்க ஆற்றுக்குப் போகலாமா ?"
      "ஐயோ, அங்கே எல்லாம் போகாதே...ஆற்றில் பெரிய பெரிய முதலைகள் இருக்கும். உன்னை இழுத்துப்போய்விடும்." என்றாள் அம்மா.
பையனுக்கு ஆச்சர்யம், "ஆனால், தினமும் அப்பா அங்கே போய் நீச்சல் அடிக்கிறாரே... அம்மா?" என்றான்.
      "டேய் ! உங்கப்பா பெரிய தொகைக்கு இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கார். அவர் போகலாம்... நீ போகக்கூடாது!"
      அந்த அம்மாவுக்கு கணவனைப் பற்றிய ஞாபகம், மகனைப்பற்றிய கற்பனை... இரண்டும் எப்படி இருக்கிறது பாருங்கள். நிறையப் பேர் என்னிடம் தங்கள் குழந்தையைக் கூட்டி வந்து நிறுத்துவார்கள், "சத்குரு, இவனுக்கு ஞாபகசக்தி கம்மியாக இருக்கிறது. அதை அதிகப்படுத்திக் கொள்ள வழிசொல்லுங்கள்" என்பார்கள்.
      "பழசெல்லாம் ஞாபகம் இருப்பதால்தானே நீங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறீர்கள்? எல்லாம் மறந்துபோனால் நல்லதுதானே? நேற்று பள்ளிக்கூடத்தில் நடந்தது ஒன்றும் ஞாபகம் இல்லாமல் உங்கள் பையன் ஆனந்தமாகத் தானே இருக்கிறான்?" என்று வேடிக்கையாகச் சொல்வேன்.
      உங்கள் தாய்,தந்தை, கணவன்,மனைவி,குழந்தை தொழில் எதுவானாலும் உங்களுடைய ஞாபகசக்தி காரணமாகத்தானே அடையாளம் காண முடிகிறது? அதேபோல், உங்கள் சாதி, மதம்,அந்தஸ்து எல்லாமே ஞாபகப் பதிவுகள்தானே?
      ஞாபக சக்தியும், கற்பனையும் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை மனதின் மிக அடி நிலையில் உள்ள சக்தி. அந்த நிலையிலேயே மனதைப் பயன்படுத்தினால், இறந்தகாலம் என்பது நம் வாழ்க்கையின் நிகழ்காலமாகி விடும்.
      கடற்கரையில் இருக்கிறீர்கள். சிலுசிலுவென்று காற்று பிரமாதமாக வீசுகிறது. ஆனால், அதை அனுபவிக்காமல், பத்து நாட்களுக்கு முன்னால் நடந்த அசம்பாவிதம் பற்றியே புத்தி சிந்தனை செய்கிறது. இந்தக் கணத்தின் சுகம் கிடைக்காமல் போகிறது.பழைய வேதனையை அதற்கான சூழ்நிலை இல்லாதபோதிலும், மறுபடி அனுபவிக்கிறீர்கள்.
      ஜப்பானில் இருந்து வருபவர்களிடம் ஒரு விசித்திர நோய் இருக்கும். ஒரு வீட்டில் இருந்து நான்கு பேர் சுற்றுலா வந்தால், நான்கு பேரிடமும் தனித்தனி கேமரா இருக்கும். மலையை, நதியை, சூரிய உதயத்தை, அஸ்தமனத்தை எதையும் நேரடியாக அனுபவிக்காமல், கேமரா வழியே கவனிப்பதிலேயே நேரம் செலவு செய்வார்கள்.
      துருக்கி சென்றிருந்தேன். அங்கே வெப்பக் காற்றை நிரப்பிய பலூன்களில் மேலே பறக்கையில், அதை ஆழ்ந்து அனுபவிக்காமல், நான்கைந்து ஜப்பானியர்கள் கேமரா வழியே படம் எடுப்பதிலேயே குறியாக இருந்தார்கள்.
      கண்கள் இப்படிச் சிறைபட்டுப் போனதில்,அதில் ஒருவர் தவறாக நகர்ந்து, கிட்டத்தட்ட முப்பதடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். தோள்பட்டையில் எலும்பு முறிவோடு அவரைத் தூக்கிப் போனார்கள். தலத்தில் அனுபவிப்பதை விடுத்து, வீட்டில் போய் நினைத்துச் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கிறது என்று எனக்குப் புரியவில்லை.
      உலகத்தில் பொதுவான பிரச்னையாக இருப்பதே, இந்த மனதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாமல் இருப்பதுதான். இறந்த காலத்தை நினைத்தபடி, உயிர் இல்லாத ஒன்றுக்கு உயிர் கொடுக்க முயற்சி செய்தால், உயிரோடு இருப்பது கூட உயிர் அற்றதாகிவிடும்.
      இப்படி மனதை மிகமிக அடிநிலையிலேயே உபயோகப்படுத்தி வராமல், நினைவாற்றல்,கற்பனை இரண்டையும் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு மனதைப் பயன்படுத்தினீர்கள் என்றால், அது எப்பேர்ப்பட்ட கூர்மையான கருவி என்று உணர்வீர்கள். உங்கள் அனுபவத்தில் இல்லாத பரிமாணங்கள்கூட உங்கள் அனுபவத்தில் வந்து சேரும். அதற்காகத்தான் தியானம் என்று கொண்டு வந்தார்கள்.
      உண்மையில், எந்தக் கணத்திலும் ஆனந்தமாக இருப்பது எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது இல்லையா? உங்கள் வாழ்க்கையில் ஆனந்தம்தான் முக்கியம் என்று நினைத்தால், அதுபற்றி மட்டுமே உங்ள் மனம் செயல்படட்டும்!" ஆனந்தமே எல்லாம்!....