Tuesday, December 9, 2014

நீங்கள் உண்மையான நண்பரா? ஆனந்தம்     Sadhguru - Making Corruption Cosmic      உங்கள் நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்? பெருவாரியான மக்களைப் போல் நீங்களும் இருந்தால், உங்கள் எண்ணங்களுக்கு, உங்கள் உணர்வுகளுக்கு, நீங்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கு, உங்கள் விருப்பு-வெறுப்புகளுக்கு ஒத்துப் போகிறவராய் பார்த்து உங்கள் நண்பராய் தேர்ந்தெடுப்பீர்கள். இதை மற்றொரு விதத்தில் பார்த்தால், உங்கள் குளறுபடிகளை ஒத்துக் கொண்டு ஆதரிப்பவர்களையே நண்பர்களாக ஆக்கி கொள்கிறீர்கள்.
      நீங்கள் யாரோ ஒருவருடைய நண்பராக இருக்கும்போது, அந்த மனிதரை அவருடைய குற்றம் குறைகளைச் சொல்லி சதா சர்வகாலமும் நச்சரித்துக் கொண்டே இருக்க மாட்டீர்கள். அதே சமயம் உங்கள் நண்பரிடம் உள்ள குறைகளை எடுத்துச் சொல்லும் நேர்த்தியும் உங்களுக்கு இருக்க வேண்டும்.
      அனைவரும் நம்மை விரும்ப வேண்டும் என்ற நம் தாகத்தால், முட்டாள்தனமான செய்கைகளை நாம் செய்யத் துவங்கிவிடுகிறோம். உங்களைச் சுற்றி இனிமையான சூழ்நிலையை உருவாக்குவதற்காக உங்களுக்குள் நீங்கள் உருவாக்கும் இனிமையற்ற சூழ்நிலையைப் பாருங்கள்! மனம் ஒரு வளமையான நிலம், அதில் நீங்கள் விதைக்கும் உணர்வுகளுக்கு நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். மிகவும் இனிமையற்ற விஷயங்களை நீங்கள் உங்களுக்குள் புதைத்தால், வளரும் கனிகள் கசப்பாகத்தான் இருக்கும்.
      உங்கள் நட்பின் உறுதியை நீங்கள் பரிசோதிக்க விரும்பினால், உங்கள் நண்பரிடம் நல்ல பெயர் எடுக்கும் எண்ணத்தை தளர்த்த முயற்சி செய்து பாருங்கள். அதைச் செய்வதற்கு உங்களுக்கு துணிவு இருக்கிறதா? தற்சமயம் உங்கள் நட்பு, உடன்படிக்கைகளின் பேரிலும் விருப்பு-வெறுப்பின் பேரிலும் நடைபெறுகிறது. ஆனால் உண்மையான நண்பன் என்றால், உங்கள் தவறுகளை சுட்டிக் காட்டும் அதே சமயத்தில் உங்களிடம் அதே அன்பையும் அரவணைப்பையும் வழங்குவார்.


என்ன புரியவில்லையா? ஒரு கதை சொல்கிறேன்…

      அமெரிக்க போர் தளபதிகள் ஒருநாள் கூடினார்கள். தங்கள் போர் படைகளுடன் உடற்பயிற்சிக்காகவும், களிப்பிற்காகவும் கிரான்ட் கன்யான் என்னும் பள்ளத்தாக்கிற்கு பயணப்பட்டார்கள். வெகு சீக்கிரத்திலேயே படைத் தளபதிகள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளத் துவங்கினர்.
      முதல் தளபதி “என் படை வீரர்களைப் போல் துணிவும் கட்டளைக்கு பணிந்து போகும் திறனும் வேறு ஒருவருக்கு வராது,” என்று தன் படைவீரர்களின் திறத்தை மெச்சத் துவங்கினார்.
      நான் நிரூபித்துக் காட்டுகிறேன் பாருங்கள், என்று “ஏ! பீட்டர்.” அங்கொரு இளம் படைவீரர் ஓடி வந்தார். “உனக்கு பின்னால் அந்த பிரம்மாண்ட பள்ளத்தாக்கை பார்க்கிறாயே? அதை நீ இப்பொழுதே தாவி மறுபக்கத்திற்குச் செல்ல வேண்டும்!”
      அந்த வீரன் தன்னால் எவ்வளவு வேகத்தில் ஓடிக் குதிக்க முடியுமோ, ஓடிக் குதித்தான். அவனால் அவ்வளவு பெரிய பள்ளத்தாக்கை தாண்ட முடியுமா என்ன? பாறையில் விழுந்து, மண்டை உடைந்து செத்துப் போனான்.
      தற்போது இரண்டாவது படைத் தலைவனின் சந்தர்ப்பம். இரண்டாவது தலைவன் இலக்காரமாக சிரித்து, “என்னைப் பார்,” என்றான்.
      “ஹிகின்ஸ்,” என்று அழைத்தார். ஒரு வீரன் வந்தான். “தற்போது ஓர் அவசர நிலை, நீ இந்த பள்ளத்தாக்கை கடந்து பறந்து சென்று மறுமுனையில் இருக்கும் நம் ஆபீஸருக்கு தகவல் சொல்லிவிட்டு வா,” என்றார்.
      அந்த மனிதர் தன் கைகளை அசைத்துக் கொண்டு… வேறென்ன நிகழ்ந்திருக்கும் பள்ளத்தாக்கில் தொப்பென விழுந்தார்.
      மூன்றாவது படைத் தளபதி மிக அமைதியாகிவிட்டார். ஆனால் பிற தளபதிகள் அவரை விடுவதாய் இல்லை. வெளியே சென்று மூன்றாமவரின் போர் வீரன் ஒருவனை அழைத்து, “அதோ கீழே உள்ள அந்த ஓடையை உன்னால் பார்க்க முடிகிறதா?” அந்த வீரன் தலை அசைத்தான். அந்த ஓடை மிகப் பெரிய அருவி ஒன்றிலிருந்து 200 மீட்டர் தொலைவிலேயே இருந்தது. அந்த படை வீரனிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்து, “நீ அந்த ஓடைக்குள் குதித்து, அதை நீந்திக் கடந்து, இந்தத் தகவலை தலைமையகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்று சொன்னார்.
      குழம்பிய நிலையில் தளபதியை பார்த்த அந்த வீரன், “சார், நீங்க ரொம்ப குடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன், இது மாதிரி முட்டாள்தனமான விஷயத்தை நான் செய்யவே மாட்டேன்,” என்றான்.
      மூன்றாவது தளபதி, அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த பிற தளபதிகளைப் பார்த்து, “இதுதான் உண்மையான தைரியம்!” என்றார்.

      உங்கள் நட்பில் தைரியமாய் இருங்கள். உங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாய் பேசுவது உங்கள் நண்பரை இழக்கச் செய்தால், பிரிவதற்கு தயாராய் இருங்கள்.

வாழ்க வளமுடன்!

5 comments:

Valaipakkam said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

மனோ சாமிநாதன் said...

உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

OURTECHNICIANS HOME BASE SERVICES said...

ourtechnicians deals with home appliance repair and services are electrical services,plumbing services, two wheeler repair, ATS system repair ervices, house renovation,paintings, washer repair services, bathroom and kitchen remodelling and maintenance services.If you need our service inspect on
home appliance
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/

Ramesh Ramar said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.Tamil News

Post a Comment